அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு - பாஜக
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டவும், அடுத்த தலைமுறை சீரழிந்து போவதை தடுத்து பாதுகாத்து, குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க, தன்னை வருத்திக்கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழக மக்களிடையே இன்று விழிப்புணர்வு போராட்டத்தை தொடங்கியுள்ளார். திமுக அரசால் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்கள் ஏமாற்றப்படுவதையும், கடந்த சட்டமன்ற தேர்தல் அளிக்கப்பட்ட பொய் வாக்குறுதிகளை மறந்து, தமிழக மக்களை வஞ்சித்ததால், கொலை கொள்ளை, போதை, ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாட்டையடி போராட்டம் அமைந்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட போட மாட்டேன் என்று அவர் எடுத்த முடிவு தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். மேலும் தமிழகத்தின் இருண்டகால திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பாஜக சார்பாக மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு அமைதிப் புரட்சியை உண்டாக்கி வருகிறது. மேலும் தமிழகத்தின் நலம் காக்க 48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை முருகனிடம் முறையிட உள்ள அண்ணாமலையின் கோரிக்கை கந்த சஷ்டி கவச நாயகன் முருகன் அருளால் நிறைவேறும். மக்கள் விரோத திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.