தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் ராஜினாமா செய்வதாக கூறியதால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு
குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பொது மக்களுக்கு பதில் கூற முடியாத சூழ்நிலையால், தங்கள் நகர் மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய போவதாக கூறியதால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சுமார் 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகும். குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினசரி மக்கும் குப்பை மக்காத குப்பைகள் பெறுவதற்கு சுகாதார பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களால், சேகரிக்கப்படும் குப்பைகள் பைகளில் மூட்டைகளாக கட்டப்பட்டு அந்தந்த வார்டு பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்ற நகர மன்ற உறுப்பினர்களை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். குமாரபாளையம் நகராட்சிக்கு என சொந்தமாக குப்பை சேகரிக்கும் கிடங்கு இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தாலும், பொதுமக்கள் ஏளனமாக பார்ப்பதாகவும், அவர்களது கேள்விக்கு பதில் கூற முடியாத சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று குமாரபாளையம் நகர மன்ற சாதாரண கூட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். கூட்ட அரங்கில் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், 24 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தர்மராஜ், மூன்றாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன், 15 வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் பேசுகையில் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்ற முடியாததால் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் உரிய பதில் வழங்க இயலவில்லை, எனவே நகரமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய கூட தயாராக உள்ளதாக தெரிவித்தனர். கவுன்சிலர் அம்பிகா பேசுகையில், எங்கள் வார்டில் வடிகால் சுத்தம் செய்வது இல்லை, குப்பைகள் எடுப்பது இல்லை, குடிநீர் குழாய் அமைத்த இடத்தில், குடிநீர் வராததால், அதனை சரி செய்ய மீண்டும் தொகை கேட்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். என்று கூறினார். இவர்கள் அனைவரும் தி.மு.க. கவுன்சிலர்கள். அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிச்சாமி பேசுகையில், குப்பை பிரச்சனை நகராட்சிக்கு மிக பெரிய அவப்பெயர் ஏற்படுத்தி விடும். என்றார்.