ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில், 2024 ஆம் ஆண்டில் அடைந்த நன்மைகளுக்காக உதவி பங்குத்தந்தை அமர்தீப் மைக்கேல் தலைமையில் நன்றி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பேராலயப் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக இறை மக்கள் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து, இறை வார்த்தை வழிபாடு, மறையுரை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றன. பின்னர், புதன்கிழமை காலை 9 மணிக்கு பேராலயத்தில் தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் டி.சகாயராஜ் அடிகளார் தலைமையில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல, கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம், மகர்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியார் ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலை புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.