கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடலோ தெரியவில்லை? - அமைச்சர் சேகர்பாபு

நேற்று முன்தினம் வரை திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-04 16:01 GMT
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3- ஆம் தேதி நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர். பாஜக - ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றார். கே.பாலகிருஷ்ணன் இத்தகையப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனின் கேள்விகள் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும். அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை. அதேபோல எந்தவொரு கோரிக்கைக்காக போராட்டம் நடந்தாலும், உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அனுப்பி பேசி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு கலந்து பேசி உடனடியாக அதற்கு நிவாரணம் காணும் அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் என்று வருகின்ற பொழுது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது திமுக ஆட்சியின் எண்ணம். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்கு பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி. பாலகிருஷ்ணன் நேற்று வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும். எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் முதல்வர், நிச்சயமாக இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Similar News