சென்னையில் சாலை வெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னை மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சாலைகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி, பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கேபிள் பதிக்கும் பணிகள், மின் வாரிய கேபிள் பதிக்கும் பணிகள் போன்றவற்றில் ஏதோ ஒன்றுக்காக ஆண்டு முழுவதும் சாலையை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சேவை நிறுவனங்கள் சில நேரங்களில் பணிகளை விரைந்து முடிக்காததால், சாலை வெட்டு சீரமைக்கப்படாமல், பழுதான நிலையிலேயே உள்ளது. பணிகளை முடிக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தால் சாலையை சீரமைக்கும் பணிகளையும் தொடங்க முடிவதில்லை. குறிப்பாக மழை காலங்களில் சாலையை வெட்டி பணிகளை விரைந்து முடிக்காமல் சாலை பள்ளமாக இருக்கும்போது, அங்கு உரிய தடுப்புகள் ஏற்படுத்தப்படாத நிலையில், வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த செப்.30-ம் தேதி முதல், மறு உத்தரவு வரும் வரை சாலை வெட்டுகள் மேற்கொள்ள தடை விதித்து இருந்தார். அவசர தேவைகளுக்கு மட்டும் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று சாலையை வெட்ட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருப்பதால், சாலைகளை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.