கார் தீப்பிடிப்பு
ஓடும் காரில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு நிதி நிறுவன அதிபர் குடும்பத்துடன் உயிர் தப்பினார
ஈரோடு ராசாம்பாளையம் , தென்றல் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை சதீஷ்குமார் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் வெப்படை செல்ல வேண்டி தனது காரில் கிளம்பினார். கார் ஈரோடு வ .உ.சி பூங்கா பின்புறம் பவானி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வெளி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் காரை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் சதீஷ்குமார் தனது குடும்பத்துடன் வெளியே வர முயற்சி செய்தபோது கார் லாக் ஆகி அவர்களால் வெளியே வர முடியவில்லை. காரின் முன் பகுதி திடீரென தீப்பிடித்தது. காரில் இருந்து புகை வெளிவருவதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல்பாளையம் போலீசார் 3 பேரும் உடனடியாக உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் ஒருவர் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் இருந்து தண்ணீர் பிடிக்கும் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தண்ணீரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மற்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கதவை திறந்து அவர்களை மீட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு நிதி நிறுவன தொழிலதிபரின் குடும்பத்தினரை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இந்த தீ விபத்தில் காரின் எஞ்சின் பகுதி எரிந்து சேதம் அடைந்தது.