தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எம்.பி. கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் ஜவ்வரிசி பயன்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.

Update: 2025-01-07 14:42 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முன்னிலையில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகம் உடனான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஜவ்வரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஜவ்வரிசி பயன்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவும், கூட்டுறவு முறையில் ஜவ்வரிசி ஆலையினை தொடங்கவும், மரவள்ளியிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்திட அரசுக்கு முன்மொழிவு அனுப்பிடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வரிசியின் தேவைகளை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். ஜவ்வரிசியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சோகோ பொருட்களும் சேகோசர்வ் மூலமாக கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நவீன முறையில் ஸ்டார்ச் அளவினை கண்டறியும் டிஜிட்டல் மீட்டர் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிலைய ஒப்புதலுடன் ஆலைக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ ஆலை நிறுவனங்கள் மூலம் மரவள்ளி மூலப்பொருள்களிலிருந்து எரிபொருள் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரே மாதிரியான GST வரி நிர்ணயம் செய்திட ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் நிதிக்கலந்தாய்வுக் கூட்டத் தொடரில் GST குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையம் நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாய பெருமக்கள் நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை ஏற்றத்தாழ்வை தடுக்கும் விதமாக கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுவது போல் மரவள்ளிக் கிழங்கிற்கும் கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்திட முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளி கிழங்கினை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்து விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளியில் செம்பேன், வெள்ளைப்பேன் பூச்சித்தாக்குதல் அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். ஒரு டன் மரவள்ளிக் கிழங்கிற்கு 50 கிலோ மண் கழிவு செய்யப்படுவதை மறுபரிசீலினை செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தினை தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சேர்த்திட பரிந்துரை செய்திட வேண்டும். ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரே மாதிரியான GST வரி நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேற்படி விவசாய பெருமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநர் கலைசெல்வி, துணை இயக்குநர்கள் புவனேஸ்வரி (தோட்டக்கலை), நாசர் (வேளாண் வணிகம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் வெங்கடாசலம், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்க்ள உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News