திருக்கோவிலூரில் ஒப்பந்த பணி செய்வதில் திமுகவினர் இடையே மோதல்: 8 பேர் படுகாயம், போலீசார் விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலின் காரணமாக இரு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 ஆகிய இரண்டு வார்டுகளுக்கும் பொதுவாக உள்ள பூங்கா ஒன்றை சுற்றி சுற்றுசுவர் அமைப்பதற்கு 4.5 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பணியை திமுகவைச் சேர்ந்த 15வது வார்டு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் ஷண்முகவள்ளியின் கணவர் ஜெகன் ஆகிய இருவரும் எடுப்பதற்கு போட்டி போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு ஒப்பந்த பணி மேற்கொள்வது குறித்து இருதரப்பையும் சேர்ந்தவர்களிடையே திருக்கோவிலூரில் பிரதான பகுதியான ஐந்து முனை சந்திப்பு அருகே மோதல் ஏற்பட்டுள்ளது.