ரேஷன் கடைகளுக்கு குறைவாக அனுப்பப்பட்ட வேட்டி, சேலைகள்
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 4,17,664 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு, அவர்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.;
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 4,17,664 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு, அவர்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத்தப் பட்டதால், விரல் ரேகை பதிவுக்கு பின்னரே பொருட்கள் வழங்கப்படுகின்றன. விரல் ரேகை பதிவாகாத முதியோர், மாற்றுத் திறனாளிகளில் வழங்கல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே 'பிராக்ஸி' முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனுமதி பெறாத முதியோர் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்தே பொருட்களை வாங்கி வருகின்றனர். நேற்று பொங்கல் தொகுப்பு பெற வந்த முதியோர் பலருக்கு விரல் ரேகை பதிவு ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. சிலருக்கு பல முறை முயற்சி செய்த பின்னரே விரல் ரேகை பதிவானது. இதனால் ஏராளமானோர் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், பல ரேஷன் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் குறைவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பலருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படவில்லை. இதனால் பலர் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரல்ரேகை பதிவாகாதோருக்கு 'பிராக்ஸி' முறையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 சதவீத சேலைகள், 64 சதவீத வேட்டிகள் வந்துள்ளன. வேட்டி, சேலைகள் வாகனங்களில் வர தாமதம் ஏற்பட்டுள்ளது. வந்ததும் விடுபட்டோருக்கும் வழங்கப்படும்' என்றனர்.