சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்ததில் மாணவர் பலி

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2025-01-10 03:28 GMT
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி சித்ரா. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). இவர் அம்மாபேடடை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்றும் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மாணவர் தட்சிணாமூர்த்தி நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது சாலை நடுவில் இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்சின் பின் சக்கரம் மாணவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் தட்சிணாமூர்த்தி பலியானார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த தட்சிணாமூர்த்தி உடலை பார்த்து அவரது பெற்றோர் பரீட்சை எழுதி விட்டு வருகிறேன் என்று கூறி சென்ற மகன் இறந்து விட்டானே என்று கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் உடன் படித்த கல்லூரி மாணவர்கள் பலர் தட்சிணாமூர்த்தி உடலை பார்த்து அழுதனர்.

Similar News