கீழடியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Update: 2025-01-13 14:23 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், இன்று (13.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் ஆகியவைகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக முழுவதும் அப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அனைத்து ஊரகப்பகுதிகளிலும் சமத்துவப் பொங்கல் விழாக்களை போன்று மாவட்டத்தின் அந்தந்த பகுதிகளில் கோலப்போட்டிகள், இளைஞர்களுக்கான பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு விழாக்களும் நடத்தப்பட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தினை நிலைநாட்டுகின்ற வகையில், தமிழர் திருநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்புவனம் வட்டத்திற்குட்ப்பட்ட உலக புகழ் பெற்ற கீழடியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையில் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், வீரவிளையாட்டுகள் ஆகியவைகளுடன் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில், அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் (Reunion) ஆகிய நாடுகளைச் சார்ந்த 28 வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர்களை, நமது மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை காண்பிக்கும் வண்ணமும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ள ஊர் பொதுமக்கள் அனைவருக்கும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளவர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். முன்னதாக, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் சிவகங்கை பையூர் பிள்ளைவயல் பகுதியிலுள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில், குழந்தைகள் இல்லங்களிடையிலான நடைபெற்ற விழிப்புணர்வு கலை விழா மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News