சூலூர்:ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்- விவசாயிகள் போராட்டம்

சூலூரில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் எனக் கூறி விவசாயிகள் 63-வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2025-01-18 06:47 GMT
பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற 63-வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், அரசு தங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சருக்கு 200 மில்லி தேங்காய் எண்ணெய் பார்சல் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம் பேசுகையில், ஆகஸ்ட் மாதம் நடத்திய சிதறு தேங்காய் போராட்டத்தின் விளைவாக 3 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகம் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் 75-வது நாள் போராட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு தேங்காய் எண்ணெய் பார்சல் அனுப்பி வைப்போம். 100 நாட்களுக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, சிதறு தேங்காய் உடைத்து, பாமாயில் பாக்கெட்டுகளை தீயிட்டு கவனயீர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Similar News