தஞ்சாவூரில் ஜன.26 குடியரசு தினத்தன்று டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி நடத்த முடிவு
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குதல் , தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி நடத்துவது என தஞ்சையில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகில் உள்ள சரோஜ் நினைவரங்கத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்கப் பிரதிநிதி வீரமோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், "டெல்லியில் கடந்த ஓராண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விவசாயிகளுடைய உறுதியான போராட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது என்று ஒன்றிய அரசு உறுதிமொழி அளித்தது. ஆனால் தற்பொழுது வேறு வடிவத்தில் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவது என்று தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சந்தைப்படுத்துதல் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தீர்வு காண வேண்டி 50 நாட்களாக பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற விவசாய சங்கத் தலைவர் ஜக்சித்சிங் தலேவால் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிரேட்டர் நொய்டாவில் சிறையில் உள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும். வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மின்சார மானியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். புதிய மின்சார சட்ட திருத்தம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது, மூன்று குற்றவியல் சட்டங்கள் மற்றும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து, வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் நாடு தழுவிய டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி நடத்த ஐக்கிய விவசாய முன்னணி அறைவல் விடுத்ததை ஏற்று, தஞ்சாவூரில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தில் மாலை 3 மணிக்கு தொல்காப்பியர் சதுக்கத்திலிருந்து மாபெரும் பேரணி புறப்பட்டு சிவகங்கை பூங்கா வந்தடைந்து பொதுக்கூட்டம் நடத்துவது என்று ஐக்கிய விவசாய முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு.பழனிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர்கள் பி.செந்தில்குமார், சோ.பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, ஏஐடியூசி தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.