தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

போட்டித் தேர்வு

Update: 2025-01-18 10:08 GMT
தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி துவங்க உள்ளது. ஆர்வமுள்ளோர் பங்கேற்க வேண்டும் என மையத்தின் மதியுரைஞர் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,  தமிழகத்திலேயே முதன்மை முயற்சியாக அரசுத் தேர்வு எழுத இலவசப் பயிற்சியை வழங்கி வரும் தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் குரூப் 1, 2, 4க்கான அடுத்த கட்ட பயிற்சி எதிர்வரும் ஜன.20 திங்கள்கிழமையன்று தொடங்க உள்ளது.  முன்னர் நடந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் பல தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ள நிலையில், இந்த முறை அதிகப்படியான போட்டித் தேர்வர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் சேர்ந்து வருகிறார்கள். மிகவும் தரமான பயிற்றுனர்களைக் கொண்டு இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சியை தொடங்கிட, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வழிகாட்டலில், மாவட்ட வருவாய் அலுவலர்  தெ.தியாகராஜன், மாநகர ஆணையர்  கண்ணன், கோட்டாட்சியர் செ.இலக்கியா உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  மிகப் பெரும் வரவேற்பை நகரத்தில் பெற்றுள்ள அரசுப் பணிக்கான இலவசப் பயிற்சியானது கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சென்றடையச் செய்ய வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் 100 இடங்களில் அமைந்துள்ள இந்த அறிவுசார் மையங்களில் தஞ்சாவூரில் உள்ள மையத்தில்தான் இத்தகைய தொடர் பயிற்சி நடைபெற்று வருகிறது. கணிணிகள், இணையதள வசதி, படிக்க, பயிற்சி பெற, தேர்வு எழுத, உணவு உண்ண, ஓய்வெடுக்க, செய்தித்தாள் வாசிக்க, வழிகாட்ட என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த மையம் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.  தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் அரசுத் தேர்வுக்கான தொடர் மாதிரி இலவசப் பயிற்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு பயில்பவர்கள், படித்து முடித்து நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வில் வென்று அனுபவம் மிக்க சங்கீதா வகுப்புக்களை ஒருங்கிணைக்க உள்ளார். கனிமொழி, செந்தமிழன், அமுதா உள்ளிட்ட நிபுணத்துவம் மிக்கவர்கள் வகுப்புக்களை கையாள உள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் அறிவுசார் மையத்தில், ஜன.20 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியிலிருந்து 5.30 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.  கொட்டிக் கிடக்கும் வாய்ப்புக்களை அள்ளிக் குவித்திட ஆர்வமும், தன்னம்பிக்கையும், மன உறுதியும், உழைக்கும் ஆர்வமும் கொண்ட அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Similar News