பெண் வேட்பு மனு நிராகரிப்பு

இறுதி வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியீடு சர்ச்சைக்குரிய கர்நாடகா பெண் வேட்பு மனு நிராகரிப்பு

Update: 2025-01-22 03:45 GMT
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் கடந்த 18ஆம் தேதி வேப்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை அடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்தவர். இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் கூறும் போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எந்த மாநிலத்துக்கும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால் சட்டசபை தொகுதிக்கு அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகா மாநில பெண் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். இதனை அடுத்து நீண்ட இழுப்பறிக்கப் பிறகு நள்ளிரவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.

Similar News