அவிநாசி அருகே ரூபாய் 2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொன்று நடகமாடிய மகன்

முதியவர் மரணத்தில் சந்தேகம். 100 -க்கு வந்த அழைப்பால் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்திற்காக மகனே தந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம். மகனை அதிரடியாக கைது செய்த போலீசார்.

Update: 2025-01-22 06:49 GMT
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சாவக்கட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புல்லார்சாமி (75). இவர் தனது மகன் ருத்ரமூர்த்தி (22) - யுடன் வசித்து வருகிறார். வாதம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட புல்லார்சாமி கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். குடிக்கு அடிமையான ருத்ரமூர்த்தி சேயூரில் உள்ள பனியன் கம்பனியில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை (19.01.2025) புல்லார்சாமி உயிரிழந்ததாக கூறி உறவினர்களை அழைத்து தனது தந்தையை அடக்கம் செய்ய ருத்ரமூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 100 எண்ணிற்கு அழைத்து, புல்லார்சாமி என்ற முதியவரை அவரது மகன் கொன்றிருக்க கூடும், உடனே விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதையடுத்து சேயூர் போலீசார் உடனடியாக புல்லார்சாமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அவரின் பிரேதத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, தனது தந்தை இயற்கை மரணமடைந்ததாக போலீசாரிடம் ருத்ரமூர்த்தி கூறி பிரேதத்தை எடுக்க விடாமல் தடுக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று புல்லார்சாமியின் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் உடலில் பல்வேறு இடங்களிலும் கழுத்துப் பகுதியிலும் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து ருத்ரமூர்த்தியிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தனது தந்தையின் சேமிப்பு கணக்கில் உள்ள இரண்டு லட்சம் ரூபாயை அபகரிக்க எண்ணி குடிபோதையில் தாக்கியதாகவும், அதில் கீழே விழுந்த தனது தந்தை உயிரிழந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ருத்ரமூர்த்தியை சேயூர் போலீசார் கைது செய்து அவிநாசி குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். இரண்டு லட்சம் ரூபாய் பணத்திற்காக மது போதையில் மகனே தந்தையை கொன்று நாடகமாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News