குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள ஆலங்கோடு, மயிலோடு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஸ்மார்ட் கார்டு சர்வே எடுப்பதாக 4 இளம்பெண்கள் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் இரண்டு ஸ்கூட்டர்களில் வந்து வீடு வீடாக சென்று ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல் ஆவணங்களை வாங்கி சேகரிக்கின்றனர். பின்னர் குடும்பத் தலைவி அல்லது தலைவரை வீட்டு முன் நிறுத்தி போட்டோக்கள் எடுக்கின்றனர். எதற்கு என்று கேட்டால் ஸ்மார்ட் கார்டு சர்வே எடுப்பதாகவும் சர்வே எடுத்து நாங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி தான் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என கூறுகின்றனர். இது குறித்து கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது வட்ட வழங்க அலுவலகத்தில் இருந்து இது போன்ற ஸ்மார்ட் கார்டு சர்வே எடுக்க யாரும் அனுப்பவில்லை. மற்ற துறைகளில் இருந்து சர்வே எடுக்க அனுப்பி உள்ளார்களா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே ஆவணங்களையும் தகவல்களை தர வேண்டாம் என கூறினார்கள். இதற்கு இடையே இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இரணியல் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது யாரும் சிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.