மார்ச் முதல் க்யூ-ஆர் கோடு மூலம் மதுபானங்கள் விற்பனை: நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, வரும் மார்ச் முதல் ‘க்யூ-ஆர் கோடு’ முறை அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2025-01-22 12:32 GMT
மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அக்டோபரில் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், ‘‘மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை அந்த கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கின்றனர். எனவேதான் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. மேலும், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்கும் வகையில் வரும் மார்ச் முதல் மதுபான விற்பனை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, க்யூ-ஆர் கோடு முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அந்த விலை மட்டுமே வசூலிக்கப்படும். கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், மதுபானங்கள் கூடுதல் தொகைக்கு விற்கப்படும் விவகாரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு முகாந்திரம் இருக்கிறது என்றால் மட்டுமே அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய மறுத்து வழக்கை முடித்துவைத்துள்ளனர்.

Similar News