2026-க்குப் பிறகு திராவிடம் துடைத்து தூர வீசப்படும் - சீமான் ஆவேசம்

2026-க்குப் பிறகு திராவிடம் துடைத்து தூரவீசப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Update: 2025-01-22 15:13 GMT
பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து, சென்னை நீலாங்கரைப் பகுதியில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தை பெரியாரிய ஆதரவு இயக்கங்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று (ஜன.22) ஈடுபட்டனர். இதனிடையே சீமான் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். முற்றுகைப் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுதைத் தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னுடைய கருத்து தவறு என்றால், பெரியாரின் கருத்துதான் தவறு. நான் புதிதாக ஒரு கருத்தைக் கூறவில்லை. பெரியார் ஏற்கெனவே பேசியதை எடுத்து பேசுகிறோம். அதில் என்ன தவறாகிவிட்டது. எனவே, அந்த கருத்துகள் தவறு என்றால் அதற்கு பெரியார்தான் பொறுப்பேற்க வேண்டும். எது தவறு என்று கூற வேண்டும். பெரியார் குறித்து பேசியதற்காக என் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. என்னிடம் கேட்கும்போது, பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை நான் காட்டுவேன். எதை ஆதாரமாக வைத்து பேசினேன் என்று கூறுவேன். திருமுருகன் காந்தி பேசாததா? நான் பேசிவிட்டேன். பெரியாரை அதிகமாக விமர்சித்தது திமுகதான் என்று அவர் பேசியிருக்கிறார். அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள். இதெல்லாம் அவரவர் தேவைக்கேற்ப பேசுவார்கள். என்னுடைய போட்டோவை எடிட் செய்து கொடுத்ததாக கூறும் நபர் யார்? 15 வருடமாக அவர் எங்கு போய் இருந்தார். என்னுடைய போட்டோவை ஏன் அவர் எடிட் செய்து கொடுக்க வேண்டும்? அதற்கான தேவை என்ன? எங்கிருந்து எடுத்துக் கொடுத்தார்? அந்தப் படத்தை எப்படி வெட்டி ஒட்டிக் கொடுத்தார். அந்த நபர் முதலில் என்னை நேரில் பார்த்திருக்கிறாரா? பேசியிருக்கிறாரா? வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை நான் ஆதரித்து பேசும்போது, போட்டோ எடிட் செய்துகொடுத்ததாக கூறும் நபர் என்னிடம் பேசியிருக்கிறார். என்னுடைய போட்டோவை எத்தனை பேர்தான் எடிட் செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் என்ன பெரிய எடிட்டர்களா? வி.டி.விஜயன் இல்லை ஸ்ரீகர் பிரசாத்தா? 15 வருடங்களாக இவர்கள் எல்லாம் எங்கே படுத்திருந்தனர். அந்தப்படம் முதன்முதலில் ஆனந்தவிகடனில் வந்தபோதே இதை ஏன் கூறவில்லை? உங்கள் பெரியார் மீது அடி விழுந்தவுடனே, இங்கே பிரபாகரன் பொய் என்று கூறுகிறார்கள். அதுதான் பெரியாரா பிரபாகரனா என மோதுவது என்றாகிவிட்டதே, மோத வேண்டியதுதானே? பெரியாரின் மெயின் பிரான்ச், ஹோல்சேல் டீலரே பேசாமல் இருக்கிறார். பெட்டிக்கடைக்காரர்கள் ஏன் இவ்வளவு துள்ளி வருகிறீர்கள்? எனவே ஆசிரியர் வீரமணியை வரச்சொல்லுங்கள். சுப.வீரபாண்டியன் பெ.மணியரசன் நடத்திய உரையாடல் போல ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் கேள்வியை கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். ஆனால், அங்கு யாரும் இருப்பது போன்று தெரியவில்லையே, இருந்தால் விவாதத்துக்கு வந்திருப்பார்களே? வாயைத்திறந்தால், இந்த திராவிட பொய் புரட்டுக்காரர்கள் அவதூறை பேசுகின்றனர். நாம் தமிழர் கட்சி என் தாத்தாவுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உடையது. சோவுக்கும், குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது.கட்டுக்கதையை கூறுகின்றனர். நான் அவர்களுடன் இருந்து வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் தானே இத்தனை பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே இந்த சோவும், குருமூர்த்தியும் வந்து எனக்கு நாம் தமிழர் கட்சியின் பெயரை வாங்கி கொடுத்தார்களா? பெரியார் உங்களுக்குத் தேவை. பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். எங்களுக்குத் தேவை இல்லை. முதலில் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். “தமிழ், தமிழர், தமிழர் அரசியல் என்று பேசுவது பித்தலாட்டம். திராவிட எழுச்சியைத் தடுப்பதற்கு செய்வதற்கான அயோக்கியத்தனம். இது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம்” என்று பெரியார் பேசியிருக்கிறார். தமிழ் முட்டாள்களின் பாஷை. தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழ் சனியனை விட்டொழியுங்கள். தமிழில் என்ன இருக்கிறது. தமிழ் உங்களைப் படிக்க வைத்ததா?”என்று பெரியார் பேசியிருக்கிறார். என் நிலத்தில் இப்படி பேசுவதற்கு அவர்கள் யார்? பெரியார் கன்னடர். அவர் கர்நாடகாவில் பிறந்தவர். என் மொழியை தாழ்த்தி இழிவாகப் பேசுவதற்கு பெரியார் யார்? அவருக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? என் நிலத்தில் வாழும் எல்லோருடைய மொழியும் உயர்ந்தது,என் மொழி தாழ்ந்ததா? அந்த சாஸ்திரத்தில் தமிழன் சூத்திரன் என்று எழுதியிருக்கிறதா? திராவிடக் கூட்டத்துக்குள் எவரும் சூத்திரன் இல்லையா? இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் இல்லையா? அடிப்படையில் என் மொழி முட்டாள்களின் பாஷை என்றால், நீங்கள் முட்டாள்களின் தலைவர் என்றுதானே கூறியிருக்க வேண்டும். தமிழர் தலைவர் என்று புத்தகம் போட்டது யார்? நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வள்ளலார் வள்ளுவரை எல்லாம் சில கூட்டம் அபகரிக்க நினைக்கிறது. ஒவ்வொரு தமிழனும் அரணாக நின்று காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அபகரிக்க நினைப்பது யார்? வள்ளுவருக்கு காவி பூசுவதும், வள்ளலாரை சனாதனத்தின் மூத்தவராகவும் கூறும் கூட்டம் அவர்களை அபகரிக்க நினைக்கிறது. நீங்கள் அழிக்க நினைக்கிறீர்கள். முதல்வருடைய அறிக்கையில் திராவிடர்கள் ஒவ்வொருவரும் அரணாக நின்று காக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை? இதில், ஏன் திராவிடன் வரவில்லை. காரணம் திராவிடனுக்கும் வள்ளலாருக்கும், திருவள்ளுவருக்கும் சம்பந்தம் இல்லை. தாய்மொழியை தவறாக பேசியிருப்பது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாவிட்டால், என் மொழியும் என் வலியும் உங்களுக்குப் புரியாது. என்னிடம் பேசாமல் விட்டால், நானும் பேசாமல் போவேன். திரும்பத்திரும்ப பேசினால், நான் கேட்கும் ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை. பெண்களின் தாலி அடிமைப்படுத்துவதாக கூறி மேடையில் அறுக்கும் நீங்கள், கருப்பப்பையை ஓரிடத்திலும் அறுக்கவில்லையே? இதுதான் நீங்கள் பெரியாரை பின்பற்றுவதா? பெரியார் பேசியதை பொதுமேடையில் கூறி வாக்கு கேளுங்களேன். பெரியார்தான் அண்ணாதுரையை படிக்க வைத்தாரா? அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றவர்களை எல்லாம் படிக்க வைத்தாரா? ரெட்டமலை சீனிவாசனை எல்லாம் அவர்தான் படிக்க வைத்தாரா? பெரியார் உங்களுக்கு வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளுங்கள். பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையைக் கூறுங்கள். எங்களைப் படிக்க வைத்தவர் காமராஜர். குடிக்க வைத்தது திராவிடம். பெரியாரின் பரிணாம வளர்ச்சிதான் திமுக. பெரியார் பெயரைச் சொல்லி போராடும் இந்த புரட்சியாளர்கள், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின்போது வாயை மூடிக்கொண்டு இருந்ததற்கான காரணம் என்ன? நீங்கள் பெரியாரைக் காப்பாற்ற போராடுகிறீர்கள்? நாங்கள் முல்லைப் பெரியாற்று நதி உரிமையைக் காக்கப் போராடுகிறோம். இத்தனை ஆண்டுகாலம் அதிகாரத்தில் இருந்தவர்களால், அந்த அணைக்கு கீழே உள்ள சிற்றணையை தூர்வார துப்பில்லை. பெரியாரை தூக்கி வருகிறார்கள். தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026-க்குப் பிறகு, இந்த திராவிடத்தை துடைத்து தூரவீசப்படும் என்று அவர் கூறினார்.

Similar News