அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்தல்
புவியியல்-சுரங்கத்துறை உதவி இயக்குநர் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் முத்து (55) தலைமையிலான மண்டல பறக்கும் படையினர், நேற்று முன்தினம் 21-ந்தேதி கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்வதற்காக நிறுத்தினர். டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர், அதிகாரிகளைக் கண்டதும், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மேற்கொண்டு, அந்த லாரியை சோதனை செய்ததில், அரசு அனுமதி எதுவும் இல்லாமல், லாரியில் சுமார் 3 யூனிட் அளவிற்கு கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அந்த டிப்பர் லாரியை ஆலடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.