ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள்

ஜல்லிக்கட்டு நிகழ்விற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் விழா நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.

Update: 2025-01-22 16:39 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசோரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (22.1.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விரும்பும் விழாக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்விற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் விழா நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்தப்படாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது. ஜல்லிக்கட்டு நிகழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வருவாய் துறை, கால்நடை பரமாரிப்பு துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, சுகாதார துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். காளைகளை பிடிக்கும் இடத்தில் 8 அடி உயரமுள்ள இரண்டடுக்கு தடுப்புகள் அமைப்பதையும், 8 அடி உயரமுள்ள கதவுகள் அமைப்பதையும் பொதுப்பணிணத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். காளைகளை பிடிக்கும் இடம், சுகாதார பரிசோதனை செய்யப்படும் இடம், வாடிவாசல் பகுதி மற்றும் காளைகளை சேகரிக்கும் பகுதி ஆகியவற்றில் எந்தவொரு விதிமுறை மீறலும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்திட துணை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் கால்நடை மருத்துவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கில் எவ்வளவு எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அமரலாம் என்பது குறித்து ஆய்வு செய்து பொதுப்பணித்துறையினர் உறுதிச்சான்று வழங்கவேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்புக் குழுவை ஒரு நாளுக்கு முன்னரே அனுப்ப வேண்டும். தடையின்மை சான்று வழங்குவதற்கு முன்பாக 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து சான்று வழங்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தேவையான தீயணைப்பு வீரர்களும் நிகழ்வு முடியும் வரை நிறுத்தப்பட வேண்டும். காளைகளை கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற வீரர்களை விழா நடைபெறும் இடத்தில் பணியமர்த்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். ஜல்லிகட்டிற்கு முன்பும், பின்பும் காளைகள் ஓய்வெடுக்கும் இடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்ட பின்னரே நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த கோரும் விண்ணப்பங்கள் நிகழ்வுகள் நடைபெறும் 30 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்கப்பட வேண்டும். காளைகளுக்கு போதைப்பொருட்களை கொடுத்தல், கண்களில் மிளகாய் பொடி தேய்த்தல், வாலினை முறுக்குதல், தடியால் அடித்தல் மற்றும் கூர்மையான பொருட்களை கொண்டு தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் சு.கோகுல் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பகவத் சிங், துணை இயக்குநர் உதவி இயக்குநர் மூக்கன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News