குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் விரிவாக்கம்: தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் இணைய கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதில், காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு தடுப்பூசியை முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை. இதனால், 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டவில்லை. எனவே, எந்த மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதை கண்டறிந்து, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், தனியார் மருத்துவனைகளிலும் தடுப்பூசி செயல் திட்டத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக 11 தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் மருத்துவமனைகள், அதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வார்கள். ஆய்வில் திருப்தி ஏற்பட்டால், இலவச தடுப்பூசி திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளும் அரசு சார்பில் வழங்கப்படும். தடுப்பூசிகள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பான ஆவணங்களை அரசுக்கு தனியார் மருத்துவமனைகள் அளிக்க வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால், தொடர்ந்து தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.