அரசு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு சாலை விபத்து நாடகம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவிநாசியில் சாலை பாதுகாப்பு மாதம் 2025 முன்னிட்டு அவிநாசி போக்குவரத்து காவல்துறை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அளகு - 2 குழு, ஆகியோர் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகே வித்தியாசமான முறையில் கலை நிகழ்ச்சியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு;
அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், தலைக்கவசம் நமது உயிர் கவசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாலையில் அதிவேகமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், இளைஞர்கள் சாலையில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மேலும் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் குழு சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டது போல தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் பார்வையாளர்கள், பொதுமக்கள் பதற்றமடைந்தனர். மேலும் எமன் போல வேடம் அணிந்தும், மனித கோபுரங்கள் அமைத்தும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரம் கொடுத்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.