கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி பாதிப்பால் மக்கள் அதிருப்தி
திருப்புவனம் அருகே கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பழையனூா் கிராம ஊராட்சிக்குள்பட்ட சம்பட்டிமடை கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரும்பாலானோா் விவசாயம், கால்நடை வளா்ப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக கொண்டுள்ளனா். இந்நிலையில், சம்பட்டிமடை கிராம மக்கள் கல்வி, மருத்துவம், அன்றாட தேவைகளுக்கு பழையனூா் கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, கட்டட வரைபட அனுமதி, வீட்டு வரி ரசீது பெறுவதற்கும் அந்த கிராமத்துக்குத் தான் செல்ல வேண்டும். சம்பட்டிமடையிலிருந்து பழையனூருக்கு செல்ல நீா் வளத்துறைக்குச் சொந்தமான கண்மாய் கரை பிரதான வழியாக உள்ளது. மழைக் காலங்களில் கண்மாய் கரை சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக் காலங்களிலும், இரவு நேரங்களிலும் சுமாா் 2 கி.மீ தொலைவு உள்ள கண்மாய்க் கரை வழியாகத் தான் செல்ல வேண்டும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே பழையனூரிலிருந்து கண்மாய்க் கரை வழியாக சம்பட்டிமடைக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், பழையனூா் கண்மாய் கரையில் மெட்டல் சாலை அமைக்க உத்தரவிட்டாா். ஆனால் பொதுப் பணித் துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது: பழையனூா் கிராமத்திலிருந்து சம்பட்டிமடைக்குச் செல்ல கண்மாய்க் கரை வழியாக சாலை அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே பொதுப் பணித் துறை தடையின்மைச் சான்றிதழை விரைந்து வழங்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும். மேலும், விரைந்து சாலை அமைக்கும் பணியை தொடங்க சம்பந்தப்பட்ட துறையும் உத்தரவிட வேண்டும் என்றனா். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தடையின்மை சான்று கேட்டு பொதுப்பணித்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணப்பித்தோம். அனுமதி கிடைக்காததால் சாலை பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தவுடன் அனுமதி வழங்கப்படும்' என்றார்.