பனிப்பொழிவு காரணமாக பூ விலை ஏற்றம்
கடும் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்தம் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து கிலோ 5000 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், வடவள்ளி, தாண்டாம்பாளையம், ராஜன்நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் மல்லிகைப்பூக்கள், சம்பங்கி மற்றும் செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிற்கும் மற்றும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது அதன் காரணமாகவும், மேலும் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெறும் முகூர்த்தம் காரணமாக பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4740 ரூபாய்க்கு விற்பனையானது.மேலும் மற்ற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ 3600 ரூபாய் முதல் 4740 ரூபாய் வரைக்கும், முல்லை பூ 2000 முதல் 2840 ரூபாய் வரைக்கும், காக்கடா 100 ரூபாய் முதல் 1375 ரூபாய் வரைக்கும், செண்டு மல்லி 10 ரூபாய் முதல் 64 ரூபாய்க்கும், கோழி கொண்டை 20 ரூபாய் முதல் 160 ரூபாய் வரைக்கும், ஜாதி முல்லை 1250 ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், துளசி 50 ரூபாய்க்கு விற்பனையானது.