நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்கு
ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் மீது வழக்கு பதிவு;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுக் கூட்டத்தில் பெரியார் பற்றி தொடர்ந்து அவர் பேசி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மாலை பிரச்சாரம் செய்ய ஏதுவாக திருநகர்காலனி பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் மரப்பாலம் முன்சிபல் சத்திரம் பகுதியில் தெருமுனை கூட்டம் என 2 இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதி வேண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் மட்டும் தெருமுனை கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தெருமுனை கூட்டத்திற்கு மேடை அமைக்க நாம் தமிழர் கட்சியினர் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் கோபமடைந்து தேர்தல் பறக்கும் படை வாகனத்தை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது தொடர்ந்து காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாம் தமிழர் கட்சியினரை போலீசார் சமாதானம் செய்தனர்.இதன் பின்னர் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் மேடை அமைத்துக் கொள்ள போலீஸ் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து நேற்று இரவு முனிசிபல் சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆனால் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் கூட்டத்தை நடத்தினர். இதுகுறித்து, பறக்கும்படை அதிகாரி, ஜெகநாதன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, முகவர் நவநீதகிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 7-வது வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சீமான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவுப்படுத்தி பேசினார். இதற்காக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.சி, எஸ்.எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.