பணம் பறிமுதல்
கான்ட்ராக்டரிடம் இருந்து ரூ.1.35 லட்சம் பறிமுதல் ஈரோடு தேர்தல் நிலைக்குழுவினர் நடவடிக்கை;

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை ஆவணங்களின்றி கொண்டு வந்தால் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் தனபிரனேஷ் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் நேற்று மதியம் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் தேனி மாவட்டம் சண்முகநாதன் கோவில் வீதியை சேர்ந்த கான்ட்ராக்டர் தொழில் செய்யும் யோகேஷ் கிருஷ்ணன் என்பதும், அவர் எடுத்து வந்த பணத்திற்கு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.