கடனுக்கு மளிகை பொருள் தர மறுப்பு வியாபாரியை தாக்கியவர்கள் கைது
தேவகோட்டையில் கடனுக்கு மளிகைப் பொருட்கள் வழங்க மறுத்த வியாபாரியைத் தாக்கியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;
சிவகங்கை மாவட்டம், எழுவன்கோட்டை சாலையில் அயூப்கான்(33) என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இக்கடையில் தேவகோட்டை ராம் நகரைச் சேர்ந்தவர் அப்துல்ஜாபர்(40) என்பவர் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்குரிய பணத்தை முறையாகக் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அந்தக் கடையில் அப்துல்ஜாபர் மகன் ரூ.110-க்கு மளிகைப் பொருட்களை வாங்கினார். ஆனால் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் நேற்று முன்தினம் இரவு மளிகைக் கடைக்கு வந்த அப்துல்ஜாபர் மகனிடம் பொருட்கள் தர அயூப்கான் மறுத்துவிட்டார். இதையறிந்த அப்துல்ஜாபர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவர், தனது நண்பரும் திமுக முன்னாள் இளைஞரணி நிர்வாகியுமான கண்ணங்கோட்டையைச் சேர்ந்த லெட்சுமணனுடன்(43) சேர்ந்து அயூப்கானை தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல்ஜாபர், லெட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.