ராமநாதபுரம் ராமேஸ்வரம் பெரிய கோயில் இன்று நடை அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இன்று நடை அடைப்பு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் கோயில் வாசலிலேயே தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்றனர்;
ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாள் திருவிழா கொண்டாப்ட்டு வருகிறது. திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று காலை சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து மாசி சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று கோவிலின் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து ஸ்படிகலிங்க தரிசன பூஜை நடைபெற்று கால பூஜை நடைபெற்று 4 மணிக்கு சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி நகரின் முக்கிய சாலைகள் வழியாக கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். பின்னர் மாலை 7 மணிக்கு மேல் பர்வதம் மண்டகப்படியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகின்றது. மூன்றாம் திருநாளான இன்று சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு இன்று காலை 7 மணியிலிருந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் இன்று முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இந்நிலையில் வெளியூர் மற்றும் வட மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த் நூற்றுகணக்கான பக்தர்கள் திருக்கோயில் கிழக்கு ராஜ கோபுரத்தின் முன் நின்று சுவாமி தரிசனம் செய்து விட்டு அவர்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்