தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில்
மாணவர்கள் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றனர்;
நம் உணர்வுகளை, மனதில் உதித்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த நமக்கு உதவும் கருவிதான் தாய்மொழி. ஆனால் இன்றோ, உலகளவில் சுமார் 40 சதவீத மக்கள், தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில், கல்வியைப் பெறவில்லை என ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில், நேற்று மாணவர்கள் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் தங்களது தாய்மொழியான தமிழின் முதல் எழுத்தான அகர வடிவத்தில் நின்று, தாய் மொழியை பாதுகாப்போம். தாய் மொழியில் கையொப்பம் விடுவோம். தாய் மொழியில் பெயர் வைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழின் முதன்மை நூலான திருக்குறளை, ஒவ்வொருவரும் கூறி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவா, பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் ஆகியோர் செய்து இருந்தனர்.