ஆறு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளி கைது
குமாரபாளையம் அருகே கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஆறு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளி கைது செய்யப் பட்டார்.;
குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை தொடர்ந்து அருகருகே உள்ள ஆறு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது தனி ஒரு நபர் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த காட்சிகள் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஆதித்யா, 20, என்ற இளைஞர் சரணடைந்து, தான் சேலம் மத்திய சிறையில் இருந்த பொழுது, அங்கு பழக்கமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த அபி குமார் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தன்னை அழைத்துக் கொண்டு குமாரபாளையம் பகுதிக்கு சென்றதாகவும், அப்பொழுது ஒரு பகுதியில் இறங்கி சில கடைகளில் பூட்டை உடைத்ததால் பயம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் சென்ற வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து எடப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கிருஷ்ணகிரி விரைந்து விசாரணை மேற்கொண்ட பொழுது, அங்கு ஊருக்கு செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதனிடையே குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்ட பொழுது, வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்தது அபி குமார், 20, என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அபி குமாரை கைது செய்த போலீசார் குமாரபாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அபி குமாருக்கு ஏற்கனவே ஐந்து வழக்குகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளதாக அடிக்கடி சிறை சென்று வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அபிக்குமார் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.