சேலம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்
அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் பணி இடைநீக்கம்;
சேலம் அருகே மல்லூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (வயது 59). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து ஓவிய ஆசிரியர் சீனிவாசனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார். மேலும் அந்த ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.