திட்டச்சேரி -நாகூர் மெயின் ரோட்டில் அபாய நிலையில் உள்ள

மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-02-25 13:39 GMT
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட ப.கொந்தகை கடைத் தெருவில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின்கம்பம் ஒன்று உள்ளது. திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து, சாலை ஓரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கொந்தகை, வாழ்மங்களம், ஆலங்குடிச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொந்தகை பேருந்து நிலையம் அருகில், திட்டச்சேரி-நாகூர் மெயின்ரோட்டில் உள்ள இரும்பாலான மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி முழுவதும் சேதம் அடைந்து, எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து பேராபத்துகளை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மின்கம்பம் எந்நேரமும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துமோ என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து, திட்டச்சேரி துணை மின் நிலைய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News