சேலத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை
8 பேரை போலீசார் கைது செய்தனர்;
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் எம்.பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற 5 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அஸ்தம்பட்டியை சேர்ந்த முகமது ஹாசன் (வயது 24), கார்த்திக் ராஜா (20), பூபாலன் (20), கிச்சிப்பாளையத்தை சேர்ந்த முகமது அலி (30), தர்மபுரியை சேர்ந்த அஜித்குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் அழகாபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (21), நாழிக்கல்பட்டியை சேர்ந்த தனுஷ் (20) ஆகியோரையும், இரும்பாலை பகுதியில் கஞ்சா விற்றதாக பெரியபுதூரை சேர்ந்த உலகநாதன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் களரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்று கொண்டிருந்த எருமாபாளையத்தை சேர்ந்த ராதிகா (47), லட்சுமி (68) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 137 மதுபாட்டில்கள், மொபட் மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுவிற்றதாக கிச்சிப்பாளையத்தில் ஜெயாவும் (58), சூரமங்கலத்தில் முனியம்மாளும் (68) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.