சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பெண்கள் தர்ணா

அதிகாரிகள் சமரசம்;

Update: 2025-02-26 04:53 GMT
சேலம் குகை ஆண்டிப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் நேற்று காலிக்குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அங்கு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பெண்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக குடிநீர் குழாயில் தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. குடிநீர் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றனர். இதையடுத்து அவர்களிடம் உங்கள் பகுதியில் கூடுதலாக குடிநீர் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News