முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் முடிவு;
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான வருகிற 1-ந் தேதி எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி தொகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். அதேபோன்று மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். மருத்துவம், ரத்ததான முகாம்கள், விளையாட்டு போட்டிகள், மரக்கன்றுகள் நட்டு ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் தமிழ்நாட்டிற்கு கல்வி திட்டத்தின் கீழ் வரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பதாகவும், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படமாட்டாது என்று கூறிய மத்திய மந்திரியை கண்டிப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற, சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க உறுதிமொழி ஏற்போம் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.