கொரியரை உரியவரிடம் ஒப்படைக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்திய
கொரியர் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நாகை நீதிமன்றம் உத்தரவு;
நாகை தாலுகா திருப்புகலூர் அஞ்சல் சன்னதி தெருவில் வசித்து வருபவர் வடிவேலு மகன் செந்தில்குமார். இவர் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு வழக்கு சம்மந்தமாக சென்னை வழக்கறிஞர் ஒருவருக்கு, நாகை நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் ஒரு பிரபல கூரியர் மூலம், கடந்தாண்டு நவம்பர் 8- ம் தேதி கூரியர் தபால் அனுப்பி வைத்தார். மேற்படி கூரியர் தபாலை குறிப்பிட்ட முகவரியில் உள்ள வழக்கறிஞரிடம் தபாலை கொடுக்காமல் கடந்தாண்டு நவம்பர் 14- ம் தேதி அன்று நாகப்பட்டினத்திற்கு சார்பு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். மேற்படி சேவைக்குறைபாடு குறித்து, வக்கீல் குமாஸ்தா செந்தில்குமார், நாகை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, மேற்படி வழக்கில் நாகையில் ஏங்கி வரும் பிரபல கொரியர் உரிமையாளர் அன்சாரி, வக்கீல் குமாஸ்தா செந்தில்குமாருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், சேவைக்குறைபாடு ஆகியவற்றிற்காக நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் வழங்கும் படியும், வழக்கு செலவு தொகையாக ரூ.5.10 லட்சமும் கொடுக்கும்படி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.