கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ் புலியூர்குறிச்சி பகுதியில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:- இந்தியாவில் 543 பாராளுமன்ற தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் இதற்கு முன்பு மத்திய அரசு கொண்டுவர முற்பட்ட போதிலும் அனைத்து மாநிலங்களும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்கவில்லை என்பதால் இந்த தொகுதி வரையறை மறுசீராய் வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரிவர செய்ய விட்டாலும் கூட தொகுதி வரையறை மறுசீரமைப்பு என்பதை நாங்கள் செய்வோம் என்கிற கணக்கில் மத்திய பாரதிய ஜனதா கட்சி உறுதி அடைந்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு எட்டு தொகுதியில் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும். மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே மதம் என்பதெல்லாம் நாடாளு மன்ற பங்களிப்பு இல்லாமலே அவர்களால் நிறைவேற்ற முடியும் என்ற சூழலை உருவாக்க செய்யப்படும் சூழ்ச்சி. எனவே இந்த திட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லை எனில் மாநில உரிமைக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, குரலற்ற மாநிலங்கள் என்கின்ற அடிப்படையில் நசுக்கப்படும் என்பதே உண்மை நிலை. இவ்வாறு அவர் கூறினார்.