அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர் மழையால் நனைந்த நெல் மூட்டைகள்
தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப விவசாயிகள் கோரிக்கை;
நாகை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மூடி இருந்தாலும், தரைத்தளத்தில் போதிய மரக்கட்டைகள் கொண்டு அடுக்கப்படாததால் மழையால் அவை நனையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததால், ஏராளமான விவசாயிகள் கொள்முதல் செய்ய முடியாமல் அதனை கொள்முதல் வளாகத்திலேயே தார்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வந்த சூழலில், கிழிந்த நிலையில் இருந்த தார்ப்பாய் காரணமாக ஒரு சில விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்துள்ளது. நாகை மாவட்டத்திற்குட்பட்ட வலிவலம், சூரமங்கலம், பையூர், பாங்கல், உத்திரங்குடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் சில நனைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆகவே, மழை ஓய்ந்த உடன், உடனடியாக கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் அவற்றை குடோன்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று அரவைக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக, திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்திருக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.