உத்தமசோழபுரம் ஊராட்சியில் தவறான இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து

7 கிராம விவசாயிகள் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டம்;

Update: 2025-02-28 13:40 GMT
நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள வெட்டாறு வழியாக கடல் நீர் உட்புகுவதால், அங்குள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனை தடுக்க, வெட்டாறு குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த 21- ம் தேதி தமிழக நீர்வளத்துறை சார்பில், நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே 49 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், தவறான இடத்தில் தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில், நரிமணம், பூதங்குடி, வடகரை, பெருங்கடம்பனூர், வடகுடி, பாலக்காடு ஆகிய 7 கிராம மக்கள், விவசாயிகள் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விளைநிலங்களில் உப்பு நீர் உட்புகும் இடத்தை தேர்வு செய்த, பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், உத்தமசோழபுரம் வெட்டாறு குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், உப்பு நீர் உட்புகுந்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டிய விவசாயிகள், தடுப்பணையை கீழ்ப்பகுதியான பூதங்குடி தெற்குபடுகையில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனிடையே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் மற்றும் 7 கிராம மக்கள் போராட்டத்தை நீட்டித்து வருகிறார்கள்.

Similar News