அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்
மழையில் நனையாமல் பாதுகாப்பாக உள்ளதா - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நேரில் ஆய்வு;
நாகை மாவட்டத்தில் இந்தாண்டு ஒருபோக சாகுபடியாக ஒரு லட்சத்து 50 ஆயி ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தார்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அ.சிவப்ரியா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன்படி, திருக்குவளை அருகே உள்ள வலிவலம், வெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், தார்ப்பாய் கொண்டு மூடியிருக்கும் நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தார்ப்பாயில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி, அவை நனையாமல் பாதுகாக்க வேண்டும் என கொள்முதல் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நாகை மாவட்டத்தை பொருத்தவரை, இந்த ஆண்டு இதுவரை சுமார் 1,60,000 மெட்ரிக் டன் அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 50,000 மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளது. மழைத் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரி மூலம் பாதுகாப்பாக, கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நாகையில் சம்பா சாகுபடி என்பது இரு மடங்காக உயர்ந்துள்ளது. மழை காரணமாக தற்காலிக கொள்முதல் நிலையங்கள் தவிர, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் செய்து நெல்லை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக பாதுகாப்பாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்