குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வன்னியூர், படப்புவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜ மணி என்ற ராஜு (42) கொத்தனார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த புஷ்பராஜ் மகன் அனில் குமார் என்ற சைபு (33) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று சைபு முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ராஜமணியின் மனைவி மற்றும் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை தட்டி கேட்ட ராஜமணியை சைபு கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ராஜாமணி அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பளு கல் போலீசார் சைபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.