மக்கள் தொகை அடிப்படையில் தான் மறு சீரமைப்பு
குழந்தைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு;
நாகை திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் இல்ல திருமண விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது தொடர்ந்து 4 மணி நேரம் நின்று தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றேன். தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கையை கொண்டு, மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமையை, எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்கிறது. நடக்க இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட சிலர் வர முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். தனிப்பட்ட திமுகவிற்கு பிரச்சினை அல்ல. இது நமது உரிமை. இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு போராடினால் தான், நாம் நினைக்கும் திட்டங்களை பெற முடியும். வர முடியாது என்று சொன்ன கட்சிகள் கண்டிப்பாக வர வேண்டும். இதில், யாரும் கௌரவத்தை பார்க்க வேண்டாம். அனைவரும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறேன். மக்கள் தொகை அதிகம் இருந்தால்தான் தொகுதி மறுசீரமைப்பு வழங்குகிறது மத்திய அரசு. ஆகையால், குழந்தைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள். பிறக்க கூடிய குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.