மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் காரணமாக மாற்று வழியில் எதிரெதிரே செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து

மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் காரணமாக மாற்று வழியில் எதிரெதிரே செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து ஒரு மாதத்தில் மட்டும் அருப்புக்கோட்டை பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட விபத்துக்கள், 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் என அதிர்ச்சி தகவலால் வாகன;

Update: 2025-03-03 14:48 GMT
மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் காரணமாக மாற்று வழியில் எதிரெதிரே செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து ஒரு மாதத்தில் மட்டும் அருப்புக்கோட்டை பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட விபத்துக்கள், 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் என அதிர்ச்சி தகவலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம். பழைய தார்சாலையை சுரண்டி மீண்டும் சாலை சீரமைக்க ஜல்லிகற்களை பயன்படுத்துவதால் தரமில்லாமல் சேதமாகும் தார்சாலை - தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை மதுரையில் இருந்து காரியாபட்டி - அருப்புக்கோட்டை - பந்தல்குடி - தூத்துக்குடி வரையிலும் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து எட்டையாபுரம் - பந்தல்குடி - அருப்புக்கோட்டை - காரியாபட்டி - மதுரை வரை, உள்ள சாலையின் மத்தியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இரு வேறு சாலையாக போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் இருந்து மதுரை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்வதற்கும், சென்னை, மும்பை, குஜராத், விசாகபட்டிணம் போன்ற துறைமுகங்களிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்வதற்கும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகர சுற்றுவட்டாரங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூர் முருகன் கோயில் செல்வதற்கும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். தனியார் நிறுவனம் பராமரித்து வந்த நிலையில் சரிவர சாலையினை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடு, சென்டர் மீடியனில் முக்கிய இடங்களில் ஆரளி செடிகள், சாலை இருபுறமும் மரக்கன்றுகள், பிரிவு ரோடுகளில் சிக்னல்கள், உயர் கோபுர மின்விளக்குகள், தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் என சரிவர இல்லை. பெரும்பாலான இடங்களில் இருந்தும் சரிவர பயன்பாட்டில் இல்லை இதனையெடுத்து தனியார் நிறுவனத்திடம் இருந்த டெண்டர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கையகப்படுத்தியது. இருந்தாலும் நீண்ட நாட்களாக சாலை சீரமைக்காமல் படுமோசமாக இருந்தது. இந்நிலையில் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாகவும் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் இருந்து வருகிறது. இந்த சாலை படுமோசமாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுகின்றன. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த நிலையில் சுங்க கட்டணம் மையத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் கிடப்பில் கிடந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள சுமார் ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பழைய தார் ரோடுகளை பெயர்த்து புதிய தார் ரோடு போடுவதற்கும் 15 மாதங்களில் 148 கிலோ மீட்டர் சாலையினை சரி செய்ய வேண்டும் என ஒப்பந்தமானது. இந்த நிலையில் சாலை சீரமைக்கும் பணிகள் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சாலை பணிகள் நடைபெறுவது குறித்து அறிவிப்பு பலகை, தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர இல்லாததால் ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் வாகன போட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை. குறிப்பாக பிரிவு ரோடுகளில் அறிவிப்பு பலகையோ பெரிய அளவில் தடுப்போ கிடையாது. பெயரளவில் வைக்கப்பட்டுள்ளதால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கிகின்றனர், பிரிவு ரோடு ஒரு வழிப்பாதை என வாகனங்கள் சென்றுவரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, அருப்புக்கோட்டை, பந்தல்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலை பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும். அதில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகம். 50க்கும் மேற்பட்டோர் கை,கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் பலத்த மற்றும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். விபத்தை தடுக்க சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் தடுப்பு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் பழைய தார் சாலைகளை சுரண்டி புதியதாக தார் சாலைகளை போட வேண்டும். ஆனால் இந்த தனியார் நிறுவனம் சுரண்டப்பட்ட பழைய ஜல்லிகற்களை மீண்டும் தார் கலவையுடன் கலந்து சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் சாலைகள் தரம் இல்லாததாகவும், மழை பெய்தால் பெயரக்கூடியதாகவும், ஒரு சில இடங்களில் மிகவும் மோசமான சாலை போடப்பட்டு வருகிறது. சாலை முழுவதும் மேடு பள்ளங்கள் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி அதிக விபத்து நடைபெறும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு நான்கு வழிச்சாலையில் சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாற்று வழியில் எதிரெதிரே வாகனங்கள் விடப்பட்டன. அப்போது இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். நான்கு வழிச்சாலையில் செய்யப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும், சாலைகளை தரமாகவும், விபத்து இல்லா சாலையாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News