சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு;
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்ட பலர், தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், பணி மூப்பு அடிப்படையில் மனுதாரர்களுக்கு உரிய பதவி உயர்வு மற்றும் அதற்கான பணப்பலன்களை வழங்க கடந்த 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது இந்த உத்தரவை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அமல்படுத்தவில்லை எனக்கூறி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், குழந்தைவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் தான் பதவி உயர்வுக்கான பரிந்துரைப் பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும் என பெரியார் பல்கலைகழகப் பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே எந்த நிர்பந்தமும் செய்யாமல் எங்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வருகிற 7-ந்தேதி நேரில் ஆஜராகி கடிதம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.