நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்து, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உரையாற்றினார்.;

Update: 2025-12-23 13:13 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல்-, 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6,17,269, பெண் வாக்காளர்கள் 655490 மற்றவர்கள் 195 என நிகர வாக்காளர்கள் 12,72,954 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தம், 2026- க்கு முன் 14,66,660 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 12,72,954 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 324 வாக்குச்சாவடிகள் உள்ளது. 1,01,173 ஆண் வாக்காளர்களும், 1,08,107 பெண் வாக்காளர்களும், 67 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2,09,347 வாக்காளர்களும் உள்ளனர். தற்பொழுது 19.12.2025 முதல் 18.01.2026 வரை வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபணை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக வாக்காளர்களுக்கு படிவம்-6, படிவம்-7 மற்றும் படிவம் -8 வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, வாக்குரிமை படைத்த அனைவரும் தவறாமல் உங்களது வாக்கினை செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும் மிக முக்கியமானது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 18-வயது பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இளம் வாக்காளர் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், தேர்தல் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், குறும்படங்கள், சுருள்கள் (Reels), ஓவியங்கள், விழிப்புணர்வு பேச்சு, பாடல்கள், கவிதைகள் ஆகியவற்றினை தயாரித்து வழங்கும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான 2026 ஜனவரி 25 அன்று பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதாடு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் விழாவில் அனைவருக்கும் உங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்படும். மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சியர்  தெரிவித்தார்.தொடர்ந்து, செல்வன் ஸ்ரீ.கபிலன் (B.Pharm 3rd Year), செல்வன் லோ.அறிவொளி (B.Pharm Final Year), செல்வன் கோ.கவின்குமார் (B.Pharm Final Year), செல்வி. ஷைலா (Pharm-D Final Year), செல்வி.சாலை ஆதிஷா (BOT 3rd Year) ஆகியோர் “என் வாக்கு என் உரிமைகள்“ என்ற தலைப்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்.இந்நிகழ்வில், 97-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  கே.ஏ.சுரேஷ்குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / குமாரபாளையம் வட்டாட்சியர் சி.பிரகாஷ், கே.கே.கே. கல்வி நிறுவன தலைவர் .ஜே.கே.கே.எம். ஜெயபிரகாஷ், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் மருந்தாளுநர் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.செந்தில்குமார், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பு அலுவலர்  சி.ஆர்.கண்ணன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News