சேலத்தில் உழவர் சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை;

Update: 2025-03-04 04:07 GMT
சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, ஓமலூர், பனமரத்துப்பட்டி, மல்லூர், கன்னங்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் சேலத்திற்கு கொண்டு வந்து ஆற்றோர தினசரி காய்கறி மார்க்கெட்டிலும், உழவர் சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை போன்ற உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சந்தைகளுக்கு காலையில் காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் தக்காளிகளை அதிகளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கணிசமாக விலை சரிந்து ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், முள்ளங்கி ரூ.18-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், தேங்காய் மட்டும் விலை குறையாமல் ஒரு தேங்காய் ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

Similar News