தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு கூட்டம்

சேலம் ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.;

Update: 2025-03-04 04:11 GMT
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. அறிவியல் இயக்க மாநில தலைவர் டாக்டர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது பாதுஷா, பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவியல் இயக்க எதிர்கால செயல்பாடுகள் பற்றி வருகிற ஒரு ஆண்டுக்குள் திட்டமிட முடிவு செய்யப்பட்டது. 2-வது நாள் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் முன்னாள் அறிவியல் இயக்க தலைவர் மோகனாவும், வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தை ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ராஜமாணிக்கமும், இன்றைய சூழ்நிலையில் தேசிய கல்விக்கொள்கை, அதில் உள்ள சவால்கள் குறித்து பேராசிரியர் மணியும் பேசினார்கள். கூட்டத்தில் மருத்துவத்துறையில் டயாலிசிஸ் போன்ற உயிர்காக்கும் மருத்துவ முறைகளை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது. கந்துவட்டி கொடுமைகளை அகற்றுவதற்கு கந்துவட்டி வாங்கும் நடைமுறையை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் பள்ளி கல்வியை மேம்படுத்த நிதி தருவோம் என்ற மத்திய மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. காலநிலை மாற்றத்தையும், அதை சமாளிப்பது எப்படி என்று ஆராயும் குழுவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து வல்லுநர்களையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Similar News