கோழி இறைச்சி கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-03-04 04:14 GMT
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13). இவன் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் மாணவன் மவுலீஸ்வரன் தந்தைக்கு உதவியாக இறைச்சி கடையில் இருந்துள்ளான். இரவு 8 மணி அளவில் பழனிவேல் கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை சுத்தம் செய்வதற்காக சுவிட்சை போடுமாறு மகனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவன் மவுலீஸ்வரன் ஈர கையுடன் சுவிட்சை போட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியது. இதில் மாணவன் மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல் கடையில் இருந்தவர்கள் உதவியுடன் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மாணவன் மவுலீஸ்வரன் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News