திருப்பத்தூர் அருகே நரிக்குறவர் குடும்பங்கள் அலைக்கழிப்பு

திருப்பத்தூர் அருகே பட்டாக்கள் வழங்கி ஒன்றரை ஆண்டாகியும் இடம் ஒதுக்காமல் நரிக்குறவர் குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகின்றன.;

Update: 2025-03-04 09:16 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பட்டாக்கள் வழங்கி ஒன்றரை ஆண்டாகியும், இடம் ஒதுக்காமல் 73 நரிக் குறவர் குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் அருகே கல்வெட்டுமேடு இந்திராநகரில் 120-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பேருந்து நிலையங்களில் ஊசி, பாசி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். 38 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு அரசால் 32 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது ஒரே வீட்டில் 2 முதல் 4 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெக்கூர் பகுதியில் இவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, 73 குடும்பங்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினார். ஆனால், அந்த இடத்தில் நரிக்குறவர்கள் குடியேற அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குன்றக்குடி பகுதியில் வேறு இடம் ஒதுக்கித் தருவதாக, வருவாய்த் துறையினர் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை இடம் ஒதுக்கித் தரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பழங்குடி நரிக்குறவர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜு தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் முறையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது ஏற்கெனவே நாங்கள் குடியிருக்கும் வீடுகள் சேத மடைந்து உள்ளன. அவற்றை சீரமைத்து தரவேண்டும். வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகளை வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டுமென வலியுறுத்தினோம். உடனடியாக பட்டாக்கள் கொடுத்தனர். மேலும், எங்களுக்கு ஒதுக் கப்பட்ட பகுதியில் 20 ஏக்கர் அரசு நிலம் இருப்பதாகவும், பிற்காலத்தில் மற்றவர்களுக்கும் அங்கேயே இடம் ஒதுக்கு வதாகவும், வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அங்கு நாங்கள் குடியேற அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேறு இடம் ஒதுக்குவதாகக் கூறி, ஒன்றரை ஆண்டாக எங்களை அலைக்கழித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Similar News